சனி, 20 பிப்ரவரி, 2016

மகாமகம்- வானில் ஓர் அணிவகுப்பு - அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை அவர்களின் சிறப்புக் கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில்

மகாமகம் வானவியல் ரீதியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு. சொல்லப் போனால் அதை வைத்துத்தான் ‘மகா' மகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அண்டவெளியில் சூரியன், பூமி, சந்திரன், வியாழன் கிரகம், மக நட்சத்திரம் ஆகிய ஐந்தும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கும்.

இவற்றில் மக நட்சத்திரத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மக நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் மகாமகம் கொண்டாடப்படுகிறது. அந்த நட்சத்திரம் பூமியிலிருந்து பல ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அது ரொம்ப ரொம்ப தூரம். மக நட்சத்திரம் வானில் சிம்ம ராசியில் உள்ளது. வானில் நம் தலைக்கு மேலே உள்ள பகுதியை விஞ்ஞானிகள் கிழக்கு மேற்காக 12 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவற்றை ராசிகள் என்றும் கூறலாம். இந்த ராசிகள் வழியே தான் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி முதலான கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன.

பூமியைச் சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது என்பதை நாம் அறிவோம். பவுர்ணமியன்று பூமி நடுவே அமைந்திருக்க சூரியன் ஒரு புறமும் சந்திரன் மறு புறமும் அமைந்திருக்கும். சந்திரன் மீது விழும் வெயில் தான் நமக்கு முழு நிலவாகத் தெரிகிறது.

ஆண்டுதோறும் மாசி மாதத்துப் பவுர்ணமியன்று சந்திரனுக்கு கிட்டத்தட்ட நேர் பின்னால் மக நட்சத்திரம் அமைந்திருக்கும். ஆகவே மாசி மகம் கொண்டாடப்படுகிறது.

வியாழன் கிரகமும் சூரியனைச் சுற்றி வருவதாகும். அது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த அளவில் வியாழன் கிரகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்துப் பவுர்ணமியன்று கிட்டத்தட்ட சந்திரனுக்கு நேர் பின்னால் அமைந்ததாகிறது. இந்த ஆண்டு அவ்விதம் நிகழ்கிறது. அதாவது அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே வரிசையில் அமைந்தவையாகின்றன. இது வானவியல் நிகழ்வாகும். இப்படியான அணிவகுப்பைத் தான் நாம் மாசி மகப் பெருவிழாவாகப் பன்னெடுங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். இது பண்டைக் காலத்தில் தமிழர்கள் வானவியல் நிகழ்வுகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

கட்டுரையை முழுமையாகப் படிக்க தி இந்து தமிழ் நாளிதழ் வலைத்தள இணைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக