சனி, 6 பிப்ரவரி, 2016

அஞ்சலில் மகாமக தீர்த்த பிரசாதம். முன்பதிவு துவக்கம்.

மகாமக தீர்த்த பிரசாதத்தை நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ள இந்து அறநிலையத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வலைத்தளத்திலும், குடந்தைக் கோயில்களிலும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தற்போது அஞ்சலகங்கள் வாயிலகவும் முன்பதிவு செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோயில்களிலும் இப்பிரசாதத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

இந்த தீர்த்த பிரசாதத்துக்கான பையில் மகாமக தீர்த்தம், கும்ப கோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில் கள் மற்றும் 5 வைணவ கோயில் களின் விபூதி, குங்குமப் பிரசாதங் கள், கற்கண்டு மற்றும் கும்ப கோணம் கோயில்களின் வரலாறு புத்தகம் ஆகியவை இருக்கும்.


விரிவான செய்திக்குறிப்புக்கு -  தி இந்து தமிழ் நாளிதழ்.

தொடர்புடைய பதிவு - மகாமக தீர்த்தம் முன்பதிவு ஆரம்பம்

மகாமகத் திருவிழாவிற்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பிப்-22 ல் விடுமுறை

மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பிப்ரவரி 22ந் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வங்கிகள், தனியார் நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான மகாமகம் - கும்பகோணத்தில் மினி மாரத்தான்

பிப்-5, மகாமகப் பெருவிழாவை தூய்மையான வகையில் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மின மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியல் தொடங்கி மீண்டும் அக்கல்லூரியில் முடிவடையும் வகையில் 10கி.மீ தொலைவிற்கு இப்போட்டி நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் 10 இடங்களை வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விரிவான செய்திக்குறிப்புக்கு - தி இந்து தமிழ் நாளிதழ், தினகரன் (06.02.2016)

பயணிகளுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்- இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

மகாமகப் பெருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் இரயில் மூலம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு கருதி பி்ப்-13 ந் தேதி முதல் பிப்-22 ந் தேதி வரை பார்சல் புக்கிங் செய்யப்படுவதற்கும், கும்பகோணத்திற்கு பார்சல்கள் அனுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே அதிகாரிகள் தகவல்.

கும்பகோணம் வரும் இரயில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் ரயில் நீர் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக தற்போது 75 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் கும்பகோணம் வந்துள்ளன.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ் (06.02.2016)

மகாமக திருக்குளம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

6 ஏக்கர் கொண்ட மகாமகக் குளத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 90 இலட்சத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று மாலை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி மகாமகக்குளம் ஒப்படைக்கப்பட்டது. குளத்தின் பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்றிதழை பொதுப்பணித்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ், தினத்தந்தி ( 06.02.2016)

மகாமகப் பெருவிழா- இன்று அஸ்திர தேவர்கள் வீதியுலா ஒத்திகை

மகாமகத்தினையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காத வகையில் கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் வெகு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகாமகப் பெருவிழாவையொட்டி அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள பணிகள் இனி மேற்கொள்ள வேண்டிய  பணிகள் குறித்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை சார்பில் பணி பகுப்பாய்வுக் கூட்டம் நேற்று (பிப்-5) நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் “மகாமகப்பெருவிழா 12 சிவன் கோயில்கள் , 5 வைணவ கோயில்களை உள்ளடக்கி நடப்பதால் 17 இணை ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கபட்பட்டுள்ளன. தொடர்புடைய கோயில்களின் உற்சவ விழா, தீர்த்தவாரி மற்றும் காவிரி ஆற்றுக்குச் செல்லுதல் போன்றவற்றை இந்த குழுக்கள் பொறுப்பேற்று நடத்தும்”  எனத் தெரிவித்தார்.


மகாமக குளத்துக்கு தீர்த்தவாரிக்குச் செல்லும் அஸ்திர தேவர்களைக் கொண்டு இன்று (பிப்-6) காலை 6 மணிக்கு அந்தந்த கோயில்களில் இருந்து வீதியுலாவாகச் சென்று ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட இருக்கிறது.

விரிவான செய்திக்குறிப்பு - தினத்தந்தி , தி இந்து தமிழ் நாளிதழ், தினகரன், தினமணி ( 06.02.2016)

விவேகானந்தர் குடந்தைக்கு விஜயம் செய்த விழா

ஆடுதுறை, பிப்-3, கும்பகோணம் பகுதியில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்த நாள் விழா நடந்தது.

வீரத்துறவி விவேகானந்தர் கடந்த 1897ல் சிகாகோவில் சொற்பொழிவாற்றிய பின் தாயகம் திரும்பிய போது பிப்ரவரி 3ம் தேதி கும்பகோணம் வந்தார். பக்தர்களின் சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கியிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க வேதாந்த பணி என்னும் சொற்பொழிவாற்றினார்.

அப்போது தான் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு வழங்கினார்.

சோழமண்டலம் விவேகானந்த சேவா சங்கம் சார்பில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்கள், படங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


விரிவான செய்திக்குறிப்பு  - தினமலர் நாளிதழ் (06.02.2016)

Welcome to Mahamaham! - வருக! வருக! மகாமகப் பெருவிழாவிற்கு...

Thanjavur District administration welcomes everyone to the Mahamaham 2016 festival.


மரம் நடும் திட்டத்திற்காக மகாமகம் ரோட்டரி சங்கத்திற்கு வேன் - சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

பிப் - 5 , கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் , கும்பகோணம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.  இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு வாகன வசதி செய்து தரும்பொருட்டு சிட்டி யூனியன் வங்கி ரூ. 5 லட்சம் மதிப்பிலான வேனை வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கலந்து கொண்டு வேனின் சாவியை ரோட்டரி சங்க தலைவர் கண்ணனிடம் வழங்கினார். அந்த வாகனத்தை வங்கியின் தலைவர் பாலசுப்பரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிட்டியூனியன் வங்கி திட்ட பொதுமேலாளர் பாலசுப்பரமணியன், மகாமக ரோட்டரி சங்க சாசன தலைவர் முகமது உசேன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விரிவான செய்தி குறிப்புக்கு - தினத்தந்தி (05.02.2016), திருச்சி பதிப்பு

பிளாஸ்டிக் இல்லா மகாமகம் - கல்லூரி மாணவ மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி

பிப்-4, மகாமகப் பெருவிழாவையொட்டி பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் இல்லா மகாமகம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் மாஸ் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலர் ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் சாஸ்த்ரா பல்கலையில் இருந்து புறப்பட்டு காந்தி பூங்காவைச் சென்றடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புத்துறைப் பேராசிரியர்கள் வெங்கட்ராமன், பிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

விரிவான செய்திக்குறிப்பு - தின இதழ் நாளிதழ் (05-02-2016)